யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றல் பொறிமுறைக்காக யப்பான் அரசு வழங்கவிருந்த வாகனங்களிற்கான வழங்கப்பட்ட நிதியை, சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் திருப்பி அனுப்ப முற்பட்டதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவமதித்ததாகவும் குறிப்பிட்டு, யாழ் மாநகரசபையின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஜப்பானியத் தூதரகத்தினால் அன்பளிப்புச் செய்யப்படவிருந்த நவீன திண்மக் கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கழிவகற்றல் வாகன கொள்வனவு, வாகனங்களின் தீர்வை மற்றும் இதர செலவுகளுக்காக ஜப்பானியத் தூதரகத்தினால் யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட ரூபா ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ஐத் திரும்பச் செலுத்தும்படி, யப்பானிய தூதரகம் கோரியது.
அதற்கு யாழ் மாநகரசபை முதல்வரும், ஆணையாளரும் சம்மதம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
எனினும், மாநகர சபைக்குத் தெரியப்படுத்தாமல் “பணத்தைத் திரும்பச் செலுத்த முடிவு செய்துள்ளோம்” என சபை சார்பில் ஆணையாளர் அனுப்பிய கடிதம் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாமல் ஆணையாளர் எதேச்சையாக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தது தவறு, ஆணையாளர் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
எனினும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக ஆணையாளர் தவறை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜப்பானியத் தூதரகத்தினால் அனுப்பப்பட்ட வரைபின் படியே ஆணையாளர் கடித்த்தில் கையொப்பமிட்டார் என முதல்வர் தெரிவித்தார். இதனைப் பரிகசித்த உறுப்பினர்கள் ஆணையாளர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு ஆணையாளரா? அல்லது ஜப்பானிய மாநகர சபைக்கு ஆணையாளரா? எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து வாக்குவாதங்கள் இடம்பெற்ற போதும் உறுப்பினர்கள் கோரியபடி ஆணையாளர் மற்றும் முதல்வர் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில், அந்த நிதியை திறைசேரி மீளப்பெற அனுமதியளித்து, கூட்டமைப்பினர் அனுப்பிய கடிதத்தை மணிவண்ணன் தரப்பினர் சுட்டிக்காட்டி, அதற்கு யாருடைய அனுமதியை பெற்றீர்கள் என கேள்வியெழுப்பினர்.
இதன்போது, ஈ.பி.டி.பியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மணிவண்ணன் தரப்பினர் கூறியதற்கு ஈ.பி.டி.பி எதிர்ப்பு தெரிவித்தது. டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாளாந்தம் பல அழைப்புக்கள் வருவதாகவும், இந்த கடிதத்தை விசேடமாக அனுப்ப்பியிருக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.
இதைடது்த
அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
இவ்வாறு உறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து போதிய கோரம் இல்லாத காரணத்தினால் சபை அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
சர்ச்சையை அடுத்து உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் மூடுமந்திரமாக சபை நடாத்தப்படுவதைக் கண்டத்து, ஆணையாளர் சபையில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியுமே உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.