தியாகி திலீபனின் இறுதிநாள் நினைவு நிகழ்வு, தமிழ் தரப்பின் மோதலால் கவனச் சிதறலடைந்துள்ளது. அரசியல் தெளிவில்லாத இளைஞர்களால் திலீபன் நினைவிடத்தில் கட்சி அரசியல் போட்டியை முன்னெடுத்தது, தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணன் அணியென உருவாகிய முரண்பாடு, பின்னர் தீவக குழு, ஜனநாயக போராளிகள் தரப்பு என விரிவடைந்துள்ளது. இன்றைய மோதல் தமிழ் மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முரண்பாடுகள் அனேகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பின்னணியிலிருந்தே உருவானது. குண்டர்கள் பாணியில் முன்னணி உறுப்பினர்கள் சண்டித்தனத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களிற்காக தன்னையே அர்ப்பணித்த தியாகி திலீபனின் உன்னதமான நினைவு நிகழ்வை, தம்மை தவிர வேறு யாரும் நினைவு நிகழ்வை நடத்தி விடக்கூடாது என்ற சின்னத்தனமான பார்வையினால் முன்னணியினர் இன்று சீர்குலைத்துள்ளனர்.
இன்று, முன்னணியினர் அநாகரிகங்களை மட்டுமல்ல, பல நகைச்சுவைகளையும் அரங்கேற்றினர்.
அவ்வாறான ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறோம்.
தியாகி திலீபனின் உருவப்படத்தை சுற்றி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் வட்டமாக நின்றனர். மலரஞ்சலி ஆரம்பித்த போது, ஒரு பாதை மட்டும் அனுமதிக்கப்பட்டது.
அங்கு வந்த முன்னாள் போராளியொருவர், அந்த பெண்களை கீழே இறங்கி, மற்றவர்கள் வசதியாக மலரஞ்சலி செலுத்த வழிவிடுமாறு குறிப்பிட்டார்.
வரிசையில் நின்ற பெண்ணொருவர் அதை மறுத்து, போராளிகள் மட்டும்தான் மேலே நிற்கலாம் என்றார்.
அப்போது கீழே நின்ற ஒருவர், வழிவிடுமாறு குறிப்பிட்டவரும் முன்னாள் போராளிதான் என சுட்டிக்காட்டினார்.
அதற்கு மேலே நின்ற பெண் இப்படி பதிலளித்தார். “இல்லை.. நாங்கள் பெண் போராளிகள்… சுதந்திரப்பறவைகள்“ என்றார்.