தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்றும் (26) களேபரம் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தீவக குழு, ஜனநாயக போராளிகள் கட்சியினர் இவ்வாறு முறுகலில் ஈடுபட்டனர்.
தியாக தீபத்தின் நினைவேந்தல் நாள் ஏற்பாட்டின் போது, 14ஆம் திகதி இரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும், மணிவண்ணன் அணியினருக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து வந்தனர்.
நேற்று மாலையும் தகராறு நடந்தது. யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் துரோகியென்றும், திலீபன் நினைவிடத்தில் நிற்க அவருக்கு அருகதையில்லையென்றும் முன்னணி “போராளிகள்“ போர்க்கொடி தூக்கினார்கள். அதனால் அங்கு தகராறு ஏற்பட்டது.
அதேவேளை, மதகுரு வேலன் ஊடகவியலாளர்களிடம் பேச முற்பட்ட போது, முன்னணியினர் ஒலிபெருக்கி சத்தத்தை அதிகரித்தனர்.
தியாக தீபத்தின் நினைவிடத்தை. காலை முதல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மாநகரசபையின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட ஏற்பாட்டுக்குழுவினரை வெளியே அனுப்பி விட்டனர்.
நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றுவதிலும் போட்டி நிலவியது.
வழக்கமாக 10.48 மணிக்கு தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்த இடத்தில் தீபம் ஏற்றி பின்னர், தூபியில் தீபம் ஏற்றுவது வழக்கம். இம்முறை, தூபியை விட்டுவிட்டு, உண்ணாவிரதமிருந்த இடத்திற்கு சென்றால், மாநகரசபையின் ஏற்பாட்டுக்குழு தூபியை கைப்பற்றி விடும் என்ற அச்சத்தில், முன்னணியின் இருவர் மட்டும் தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்திற்கு சென்று விளக்கேற்றினர்.
அதே சமயம் ஏனையவர்கள் தூபியில் விளக்கேற்றினர்.
கைதடி பகுதியில் இருந்து அனைத்து கட்சியினரும் உள்ளடங்கலாக இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர். காவடி எடுத்து வந்தவர்கள் 10.48 மணிக்கு தூபியில் விளக்கேற்ற விரும்பினார்கள்.
எனினும், முன்னணியினர் அதை மறுத்து விட்டனர். நிகழ்ச்சி நிரலில் இல்லாதவற்றை அனுமதிக்க முடியாதென அடம்பிடித்தனர்.
தாம் நினைவிடம் முன்பாக தீபம் ஏற்ற போகிறோம். என அவ்விடத்தினை சுற்றி கைகளை கோர்த்தவாறு நின்றனர். அதன் போது காவடியுடன் வந்தவர்கள் காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள் , தீபம் ஏற்றுவதற்கு 08 நிமிடங்கள் இருக்கின்றன தானே என கேட்ட போது , அவ்வாறு அனுமதிக்க முடியாது என முரண்பட்டுக்கொண்டனர்.
அதனால் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்டது.
அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை காணப்பட்டமையால் , மதகுரு வேலன் அமைதி காக்குமாறு கூறிய போது , முன்னணியினர் தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள்.
தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது மலர் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இடையூறாக அவ்விடத்தில் தாமே மலர் அஞ்சலி செலுத்த முன்னணியினர் தடைகளை ஏற்படுத்தும் விதமாக நினைவிடத்தில் குழுமி நின்றனர். மலரஞ்சலி செலுத்தியவர்கள் கீழே இறங்கி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கோரிய போது முரண்பட்டு கொண்டனர்.
காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த முன்னணியினரின் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது. அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.
தமது எதிர்ப்பை மீறி காவடியெடுத்து வந்தவர்கள் தீபம் ஏற்றிவிடக்கூடாதென்ற அவசரத்தில், முன்னணியினர் பிரதான தீபத்தை அவசரமாக அகற்ற முற்பட்ட போது, அகற்றிய ஒருவரே சுடு எண்ணெய் பட்டு காயமடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.