தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்கள் அல்ல, பிரதிவாதிகளின் நடவடிக்கைகளே என ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
நாட்டையும் பொதுமக்களையும் வங்குரோத்து செய்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகீஸ்வரன், மோசமான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் தீர்மானங்களினால் இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை எதிர்மனுதாரர்கள் மீறியதாக இந்த மனுதாரர்கள் முன்வைத்த உண்மைகளை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
பிரதிவாதிகளின் சில செயல்கள் மற்றும் புறக்கணிப்புகள் காரணமாக, அடிப்படை உரிமைகள் தெளிவாக மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மனுக்கள் மூலம் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அந்த விடயங்கள் தொடர்பில் பிரதிவாதிகள் தாக்கல் செய்த ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும், நீதிமன்றத்திற்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகள் அடிப்படையற்றவை எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த மனுக்கள் பிரதிவாதிகளின் நிறைவேற்று மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் இந்த நீதிமன்றத்தினால் மட்டுமே நிவாரணம் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹிம் மெண்டிஸ், முன்னாள் வர்த்தக சபையின் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சம்பியன் ஜூலியன் பொலிங், ஜெஹான் கனேகரத்ன மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா ஆகிய நிறுவனங்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபரை மேற்கோளிட்டு, முன்னாள் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டொக்டர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், முன்னாள் நிதி அமைட்டிக்கல உள்ளிட்ட 39 பேர் பிரதிவாதிகளாக இடம்பெற்றுள்ளனர்.
நாடு தற்போது திவாலான நிலையில் இருப்பதாகவும், எதிர்மனுதாரர்கள் பின்பற்றும் விவேகமற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் மக்கள் அத்தியாவசிய சேவைகளான எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்து போன்றவற்றைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை காரணமாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு மேலும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு எதிர்மனுதாரர்கள் தேவையில்லாமல் வழங்கிய வரிச் சலுகைகளும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணம் என மனுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பொருளாதார நெருக்கடியின் போது சரியான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியைப் பெறத் தவறியதே நாட்டில் இத்தகைய நெருக்கடிக்கு வழிவகுத்தது என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மனுக்கள், பிரதிவாதிகள் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வழக்குகள் தொடர்பாக நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் தவறான மேலாண்மை குறித்த அறிக்கையைத் தொகுக்க நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஒரு குழுவை நியமிக்குமாறு உத்தரவிடுமாறும் மனுக்கள் கோரியுள்ளன.
அத்துடன், நிதி விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள், பிரதிவாதிகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.