பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ், அவரது தாயார் எலிசபெத் அரசியாரின் பாதையில் நாட்டுக்குச் சேவையாற்ற உறுதி தெரிவித்திருக்கிறார்.
கடமைக்க்குத் தம்மை அர்ப்பணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியார் மீது ஒரு மகனாகத் தாம் வைத்திருந்த அன்பு, தமது மனைவி, மகன்கள் மீது தாம் கொண்டிருக்கும் பாசம் ஆகியவை குறித்தும் அவர் பேசினார்.
எலிசபெத் அரசியார் தமது 96ஆவது வயதில் காலமானதை அடுத்து, நேற்று முன் தினம், சார்ல்ஸ், பிரிட்டனின் மன்னனானார்.
அரசியாரின் மறைவுக்குப் பிறகு முதல்முறையாக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவரது உரை உணர்வுபூர்வமாகத் தொடங்கியது.
“எலிசபெத் அரசியாரைப் பொறுத்தவரை, அவரது வாழ்க்கை பூரணமானது; அவரது மறைவுக்கு மக்கள் ஆழ்ந்த துக்கம் அனுசரிக்கின்றனர்” என்று தமது உரையைத் தொடங்கினார் மன்னர் சார்ல்ஸ்.
எலிசபெத் அரசியார் தமக்கு எப்போதும் ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்திருப்பதாய் அவர் கூறினார்.
தனிப்பட்ட முறையில் மக்களுக்குத் தன்னிகரற்ற சேவையாற்ற அவர் எப்போதும் கடப்பாடு கொண்டிருந்ததை மன்னர் சார்ல்ஸ் நினைவுகூர்ந்தார்.
“அவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைத் தொடர, இன்று நான் உறுதி தெரிவிக்கிறேன்.” என்றார் அவர்.




