பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள அவரது புதிய பங்களாவில் குடிபுகுந்தார்.
அவரது சகோதரர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உள்ளிட்டவர்கள் நேற்று அவரைச் சந்தித்தனர்.
அரசால் ஒதுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது.
50 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டில் பதுங்கி இருந்து நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சேவுக்கும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவுக்கும் வெள்ளிக்கிழமை இரவு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அரசியல்வாதிகள் பலரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் வந்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை வரவேற்றவர்களில் பல அமைச்சரவை அமைச்சர்களும் அடங்குவர். அவர்களில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன மற்றும் திரான் அலஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, இந்திக அனுருத்த, கனக ஹேரத், பிரசன்ன ரணவீர, மதுர விதானகே, திலும் அமுனுகம மற்றும் ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.
ஜூலை 13 அன்று பொதுமக்கள் எழுச்சியடைந்ததை தொடர்ந்து, கோட்டா விமானப்படை விமானத்தில் ஏறி மாலைதீவுக்கு தப்பியோடினார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பதவிவிலகல் கடிதத்தை அனுப்பினார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பினார்.
ஓகஸ்ட் மாதம் முதல் தாய்லாந்தில் பதுங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு நாட்டை வந்தடைந்தார்.
அவருக்கு வழங்கப்பட்ட வீடு, விமல் வீரவன்ச அமைச்சராக பதவிவகித்த போது பயன்படுத்திய வீடாகும். இந்த வீட்டிற்கு அருகிலேயே நாமல் ராஜபக்ஷவின் வீடும் உள்ளது.
இதேவேளை, கோட்டாவின் எதிர்கால திட்டங்கள் பற்றி தமக்கு தெரியாதென அரசின் மூத்த பிரமுகர் ஒருவரை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“நேற்றிரவு அவர் எங்களிடம் கூறியது என்னவென்றால், தாய்லாந்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தனது அறையை விட்டு வெளியே வரக்கூட அனுமதிக்கப்படாததால் அவருக்கு சிறிது நேரம் தேவை” என்று அந்த பிரமுகர் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்க்பட்டுள்ளது.
கோட்டாபய ஜிம்மிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.
“அவர் வீட்டில் சிறிது நேரம் செலவிட்டவுடன், அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை எங்களுக்குத் தெரிவிப்பார்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பிரமுகர் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




