ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினர் (ரெலோ) இன்று (03) சந்தித்து பேசினர்.
இன்று காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேன் வெளியிட்ட ஊடக அறிக்கையில்,
இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம் பி, செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரனம் எம்பி மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இச் சந்திப்பு நடைபெற்றது.
முதலாவதாக குரல் அற்றோர் குரல் அமைப்பினரின் வேண்டுகோளை சுட்டிக்காட்டி அவர்களால் கையளிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விபரம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. 24 கைதிகள் தண்டனை வழங்கப்பட்டு இருப்பதனாலே நேரடியாக ஜனாதிபதியின் உத்தரவில் விடுதலை செய்யப்பட முடியும் என்றும் கால தாமதம் இன்றி அவர்களை விடுவிக்குமாறும் கோரப்பட்டது.
மேலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 22 கைதிகள் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பினால் விடுதலை செய்ய முடியும். தண்டனை வழங்கிய பின்னர் தான் விடுதலை செய்ய முடியும் என்ற அரசியல் யாப்பு நிலைப்பாட்டை கருத்தில் கொள்வதாக இருந்தால் இனி வழக்கு தொடுத்து தீர்ப்புகள் வழங்கப்படுவது இவ்வரசியல் கைதிகளின் விடுதலையில் காலதாமதத்தையே ஏற்படுத்தும். அதேநேரம் நல்லாட்சி அரசின் காலத்தில் புனர்வாழ்வு அளிக்கும் முறைமையின் கீழ் கைதிகள் விடுதலை செய்யலாம் என்ற திட்டத்தை அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி நடைமுறைப்படுத்த முற்பட்டதும் நினைவு கூரப்பட்டது.
குரல் அற்றோர் குரல் அமைப்பினர் வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய்யும் பொறிமுறை, அது குறுகிய காலப் புனர் வாழ்வின் அடிப்படையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தண்டனை வழங்கப்பட்ட 24 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றவர்களுடைய விடுவிப்பு சம்பந்தமாக நீதி அமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
மேலதிகமாகத் தடுப்பில் உள்ள முப்பத்தி எட்டு அரசியல் கைதிகளுக்கு எதிராக எந்த குற்றங்களும் இல்லாததனால் ஜனாதிபதி ஆணைக் குழுவின் பரிந்துரையின் படி அவர்களை விடுவிக்க முடியும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.
இரண்டாவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் பற்றி பேசப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான தகவல்களை திரட்டுவதற்கு சர்வதேச மேற்பார்வை உடனான பொறிமுறையே அவசியம் என்பதை கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் அதையே வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையற்ற நிலையில் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய பொறிமுறையே காணாமல் ஆக்கப் பட்டவர்களுகான நீதியை பெற்றுத் தரும் என தொடர்ந்தும் கோரி வருகிறோம். எனவே அதற்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஐநா அமர்வுகளுக்கு பின்னராக நீதி அமைச்சருடன் அதற்கான குழு ஒன்றை அமைத்து தமிழர் தரப்புடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மூன்றாவதாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற வேலைத்திட்டத்தை இனிமேலும் பின் போடாது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே நல்லாட்சி காலத்தில் அதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது. அது நிறைவேற்றப் படாமல் போனது துரதிர்ஷ்ட வசமானது. ஒரு நிர்வாக ரீதியான தரம் உயர்த்தலுக்கு அரசியல் காரணங்களைக் காட்டிப் பின் போடுவது அந்த மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதாக அமையுமே தவிர எத்தரப்புக்கும் நன்மை பயக்காது என்று எடுத்துரைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி விரைந்து அதை செயல்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.
நான்காவதாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் குறிப்பாக வடக்கு கிழக்கு மீனவர்கள், தொழில் செய்ய முடியாமல் படும் தொடர் துன்ப நிலையும் அவர்களுடைய பிரச்சினை உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் கோரப் பட்டது.
வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தாங்கள் முன்மொழிந்த சலுகைகளை வரவேற்கிறோம். அதேநேரம் விதைப்புக் காலம் ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், ஏற்கனவே உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளினாலும் எரிபொருள் விலையேற்றத்தினாலும் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது அவர்களுக்கான உரம் மற்றும் கிருமிநாசினிகள் என்பவை சரியான நேரத்திற்கு வழங்கப்படாத விடத்து எதிர்வரும் போகத்தில் பாரிய சிக்கலை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். இந்தப் போகத்தில் விவசாயம் பாதிக்கப்படுமாக இருந்தால் நாடு ஒட்டுமொத்தமாக உணவுப் பஞ்சத்தில் வீழ்ந்துவிடும். சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமாவது உதவிகளைப் பெற்று இந்த பிரச்சினைக்கு அவசர முடிவு காண வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தல், இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் என்பவற்றை பிரஸ்தாபித்த பொழுது காணி கையகப் படுத்தல் உடனடியாக தடுத்து நிறுத்துவதாகவும் இராணுவ பிரசன்னத்தை பாதுகாப்புச் சபையின் ஊடாக கட்டங்கட்டமாக குறைக்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்குவதோடு, புலம்பெயர் முதலீட்டாளர்கள் சம்பந்தமான அரசியல் அதிகார ரீதியான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே அவர்களை நம்பிக்கை கொள்ள வைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப் பட்டது.
முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் எல்லா விடயங்களுக்கும் அவசியமான மற்றும் அவசரமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.