பீகாரில் ரவுடிகள் போலியாக போலீஸ் நிலையம் அமைத்து அதை 8 மாதங்களாக நடத்தி வந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட வேலைகளை செய்துவருகிறார்கள்.
இந்த ரவுடி கும்பல் போலியாக காவல் நிலையத்தை நடத்தி மக்களிடம் இருந்து பணத்தை பறித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பாங்கா நகரில் உள்ள அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஓட்டலை தேர்ந்தெடுத்த 6 ரவுடிகள் அங்குள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து போலீஸ் நிலையமாக மாற்றினர். அவர்களில் இரு பெண்களும் அடங்குவர். காவலர், தலைமைக் காவலர், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்ற பதவிநிலை வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர்.
மேலும், அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளை உறைக்குள் வைத்துக் கொண்டனர். பார்ப்பவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராத வகையில் அவர்கள் தன்னை ஒரிஜினல் போலீஸ்காரர்களாகவே மாறினர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பகுதியில் உள்ள நிஜ போலீஸ் உயரதிகாரியின் வீட்டுக்கு பக்கத்தில்தான் அவர்கள் போலி போலீஸ் நிலையத்தை அமைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் யாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை.
போலீஸ் நிலையம் அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அப்பகுதி மக்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் வர தொடங்கினர். அவ்வாறு வரும் மக்களிடம் இருந்து அவர்களிடம் உள்ள புகாரை பொறுத்து ரவுடி போலீசார் பணம் பறிக்க தொடங்கினர்.
அப்பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்தும் அவர்கள் மாமூல் வசூலிக்க தொடங்கினர். இதனால் மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு கிடைத்தது.
இவ்வாறு 8 மாதங்களாக போலி போலீஸ் நிலையத்தை அவர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த நிஜ போலீஸ் ஒருவர் இந்த போலி போலீசில் ஒருவரை பிடித்து உள்ளார். அப்போது அவரிடம் இருந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கி வகையைச் சேர்ந்தது என்பதை அவர் கண்டறிந்தார்.
இதையடுத்து, இதுகுறித்து தனது உயரதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணித்த போது அவர்கள் போலி போலீசார் என்பதும், போலி போலீஸ் நிலையத்தை அவர்கள் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 16ஆம் திகதியன்று போலி காவல் நிலையத்துக்கு சென்ற 10க்கும் மேற்பட்ட போலீசார், போலீஸ் உடையில் இருந்த ரவுடிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், போலி முத்திரைகள் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.