ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை பல்லன்சேனை புனர்வாழ்வு நிலையத்தில் ஓருவருடம் புனர்வாழ்வளிக்குமாறு மினுவாங்கொடை நீதவான் அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஹெரோயின் போதைக்கு அடிமையான தமது கணவர்களுக்கு புனர்வாழ்வளிக்குமாறு அவர்களது மனைவிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரகொட மற்றும் வல்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் 36 மற்றும் 34 வயதுடைய ஆண்களே இவ்வாறு பல்லன்சேனையில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
100 மில்லிகிராம் மற்றும் 85 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்களும் கொடதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் சந்தேகநபர்கள் இருவரின் மனைவிகளும் சட்டத்தரணிகளின் உதவியுடன் மனு ஒன்றின் ஊடாக மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.