அளுத்கம களுவாமோதர முல்லப்பிட்டி வீதியில் விபத்தை ஏற்படுத்தி, 10 வயது சிறுவனை பலத்த காயங்களுக்கு உள்ளாக்கிய பேருவளை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தலைமறைவாக இருந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் தனது சகோதரியுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற 10 வயது சிறுவன்,வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் சிறுவனுக்கு கால் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற நாளிலிருந்து (12) சந்தேகநபரின் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருந்த போதிலும், அவரது காருடன் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்படும் வரை சந்தேகநபர் சரணடையத் தவறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் இன்று (16) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.