அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் தெருவில் இரண்டு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குற்றவியல் கும்பலால் திட்டமிட்ட படுகொலை என காவல்துறை கூறுகிறது.
சனிக்கிழமை இரவு சிட்னியின் தென்மேற்கில் உள்ள பனானியாவில் நண்பர்கள் குழுவுடன் வெளியே சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் “பயங்கரமானது” என்று நியூசவுத் வேல்ஸ் பொலிசார் தெரிவித்தனர்..
பனானியாவில் உள்ள ஹெண்டி அவென்யூவில் காரின் பின் இருக்கையில் இருந்த இரண்டு பெண்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
48 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் லாமெட்டா ஃபட்லால்லா மற்றும் 39 வயதான அம்னே அல்-ஹசோரி ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் உயிரிழ்தனர். வாகனத்தில் இருந்த 20 வயது ஆணும் 16 வயது சிறுமியும் காயமடையவில்லை.
ஃபட்லால்லா சம்பவ இடத்திலேயே இறந்தார். அம்னே அல்-ஹசோரி ஆபத்தான நிலையில் லிவர்பூல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிட்னியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஹெலால் சஃபியின் முன்னாள் காதலி, போதைப்பொருள் வியாபாரியான லாமெட்டா ஃபட்லால்லாவை குறிவைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துரதிஷ்டவசமாக அவருடன் பயணித்தவரும் உயிரிழந்தார்.
அவுஸ்திரேலிய குற்றக்கும்பல்களிடையே “குடும்பத்தினரையும் பெண்களையும் தொடக்கூடாது” என்ற ஒரு எழுதப்படாத விதி இருந்தது.அதனை மீறி இந்த கொலைகள் நடந்துள்ளன.
இதேவேளை, மூர்பேங்க், ரெவ்ஸ்பி மற்றும் யாகூனா ஆகிய இடங்களில் எரிந்த மூன்று கார்களை போலீசார் கண்டுபிடித்து, அவை இந்த காலைச் சம்பவத்துடன் தொடர்புடையதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.