இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கும் தாய்லாந்தின் முடிவிற்கு அந்த நாட்டு புத்திஜீவிகளும் ஆட்சேபணை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு இலக்கானவர், மக்களின் கோபத்திற்கு இலக்கானவருக்கு அடைக்கலமளித்து, இலங்கை மக்களின் வெறுப்பிற்கு தாய்லாந்தை உள்ளாக்க வேண்டாமென அவர்கள் கோரியுள்ளனர்.
தவறான நிர்வாகத்தால் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷ, பொதுமக்களின் கொந்தளிப்பையடுத்து ஜூலை 13 அன்று இலங்கையிலிருந்து இராணுவ விமானத்தில் மாலைதீவிற்கு தப்பியோடினார். மறுநாள் (14) சிங்கப்பூரிற்கு சென்றார்.
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிடம் அடைக்கலம் கோரினார். எனினும், எந்த நாடும் அடைக்கலம் வழங்கவில்லை. சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்த பின்னர் நேற்று தாய்லாந்து சென்றார்.
சிங்கப்பூரிலுள்ள செலிடார் விமான நிலையத்தில் இருந்து வாடகை விமானம் மூலம், உள்ளூர் நேரம் இரவு 8 மணியளவில் தாய்லாந்தின் மான் முயாங் விமான நிலைத்தை சென்றடைந்தார்.
அவர் சில வாகனங்களின் பாதுகாப்புடன் பாதுகாப்பான தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்த காணொளிகளில் இறுகிய முகத்துடன் விமான நிலையத்தை விட்டு கோட்டா தம்பதி வெளியேறுவது தெரிகிறது.
கோட்டாபய தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்றும் அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை மற்றும் இது ஒரு தற்காலிக தங்குமிடம் என்று ஒரு ஒப்பந்தம் உள்ளது” என்று பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
தாய்லாந்தில் இருக்கும் போது கோட்டாபய எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியாது என்றும் ஜெனரல் பிரயுத் கூறினார்.
கோட்டாபயவின் தாய்லாந்து பயணத்தை தற்போதைய இலங்கை அரசாங்கம் ஆதரிப்பதாகக் கூறிய வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினாய், முன்னாள் ஜனாதிபதியின் இராஜதந்திர பாஸ்போர்ட் அவரை 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும் என்றும் கூறினார்.
இலங்கையில் தனக்கு எதிரான போராட்டங்கள் முறியடிக்கப்பட்டதால் கோட்டாபய வீட்டிற்குச் செல்ல ஆர்வமாக இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. அதனர் நவம்பர் அளவில் அவர் இலங்கை வரலாமென நம்பப்படுகிறது.
2009 இல் முடிவடைந்த பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கோட்டாபய மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் குழு கடந்த மாதம் சிங்கப்பூரை முறைப்படி கேட்டுக் கொண்டது.
BREAKING: โคฐาภยะ ราชปักษะ อดีตประธานาธิบดีศรีลังกาถึงไทยแล้วที่สนามบินดอนเมือง วันนี้ (11 ส.ค. 65) เวลา 20.40 น. #TheReporters #เดอะรีพอร์ตเตอร์ pic.twitter.com/dkaV4A7ufC
— The Reporters (@thereportersth) August 11, 2022
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை கடுமையாக மீறியதற்காக முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய சிங்கப்பூர் உலகளாவிய அதிகார வரம்பை பயன்படுத்த வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் கூறியது.
இந்த முறைப்பாடு தமக்கு கிடைக்கப் பெற்றதை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் தாய்லாந்து சென்ற கோட்டாபயவிற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
“கடினமான காலங்களில், நாங்கள் பல விஷயங்களை ஒன்றாகக் கருதுகிறோம், ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் தாய்லாந்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தவில்லை, மேலும் அவர் 90 நாட்களுக்கு மேல் நாட்டில் தங்கப்போவதில்லை. தனது தங்குமிட விடயங்களை கோட்டாபயவே நிர்வகிப்பார். அவருக்கு தங்குமிடம் வழங்கும் இந்த முடிவு நாடுகளின் “நட்பு உறவுகளின்” அடிப்படையிலானது. எந்தவொரு அரசியல் தஞ்சமும் கோரப்படவில்லை” என்று தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
தாய்லாந்து எதிர்க்கட்சிகள் பல கோட்டாபயவிற்கு அடைக்கலம் வழங்கிய முடிவை எதிர்த்துள்ளன.
அத்துடன், தாய்லாந்து சர்வதேச உறவுகள் நிபுணர் சாய்வட் கம்சூ தெரிவிக்கையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை வரவேற்க தாய்லாந்து அரசாங்கம் மறுக்க முடியாது, ஏனெனில் கைது வாரண்ட் அல்லது குற்றவியல் நிலை குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது இலங்கை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும், எனவே அரசாங்கம் பக்கச்சார்பற்ற பாத்திரத்தை வகிக்க வேண்டும். ராஜபக்ஷவிற்கும் தமக்கும் உத்தியோகபூர்வ உறவில்லை, இது தனிப்பட்ட பயணம் என்பதை தாய்லாந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தானி சாங்ராட், முன்னாள் ஜனாதிபதிக்கு தற்காலிக தங்குமிடம் வழங்குமாறு இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ராஜபக்ச தாய்லாந்தில் அரசியல் அகதி அந்தஸ்தை கோர மாட்டார் என்றும், அவரது விஜயத்திற்குப் பிறகு தனது அடுத்த இலக்கைத் தொடர்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.