பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் செய்ன் ஆற்றில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெலுகா (beluga) வகைத் திமிங்கிலம் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது.
13 அடி பெலுகா திமிங்கலத்தை பெரு முயற்சியின் பின் ஆற்றிலிருந்து மீட்டு, கடலில் விட கொண்டு செல்லப்பட்ட போதும், அது கடலில் வாழ போதுமான ஆரோக்கியத்துடன் இல்லாமலும், மிகுந்த வலியை எதிர்கொண்டிருந்ததாலும், கருணைக்கொலை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை திமிங்கிலம் கருணைக்கொலை செய்யப்பட்டது.
ஆர்க்டிக் (Arctic) வட்டாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் வழிதவறிய திமிங்கிலம் கடந்த வாரம், பாரிஸிலிருந்து வடமேற்கே 45 மைல் தொலைவில் உள்ள Saint-Pierre-La-Garenne என்ற நன்னீர் ஆற்றில் முதன்முறையாக தென்பட்டது.
பல நாள்களாக ஆற்றில் சிக்கிக்கொண்ட திமிங்கிலத்தை மீட்க பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 9ஆம் திகதி ஆற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.
அதனை நோர்மண்டி கடலில் விட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எண்பது மீட்புப் பணியாளர்கள் திமிங்கிலத்தை மீட்க 6 மணிநேர முயற்சியெடுத்தனர். மீட்கப்பட்ட திமிங்கிலம் ஒரு படகில் வைக்கப்பட்டு, விஞ்ஞானிகளால் மதிப்பிடப்பட்டது. பல நாட்கள் உணவு உண்ணாமல் இருந்ததால் மிக கடுமையான எடை இழப்பினால் பாதிக்கப்பட்டிருந்தது.
சுமார் 1800 பவுண்ட்கள் எடையுள்ள திமிங்கிலம் சுமார் 800 பவுண்ட்கள் எடையிழந்திருந்தது.
அதை மீண்டும் கடலுக்குள் விட முடியாது என்பதால், திமிங்கலம் கருணைக்கொலை செய்யப்பட்டது.
“பயணத்தின் போது, கால்நடை மருத்துவர்கள் அதன் நிலை மோசமடைந்ததைக் குறிப்பிட்டனர், குறிப்பாக அதன் சுவாச செயல்பாட்டில், வலியில் இருப்பதையும், போதுமான சுவாசம் இல்லாமல் இருப்பதையும் நாங்கள் பார்க்க முடிந்தது,” என்று தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் கால்நடை மருத்துவர் புளோரன்ஸ் ஆலிவெட்-கோர்டோயிஸ் கூறினார்.
“திமிங்கிலத்திற்கு துன்பம் தெளிவாக இருந்தது, எனவே அதன் பதற்றத்தை விடுவிப்பது முக்கியம்.” என குறிப்பிட்டார்.
ஆற்றில் சிக்கியிருந்த போது திமிங்கிலம் உணவு உட்கொள்ள மறுத்திருந்து. அதன் வலிமையை பெருக்கவும், பசியுணர்வை ஏற்படுத்தவும் விற்றமின் உள்ளிட்ட மருந்துகள் அதன் உடலில் செலுத்தப்பட்டிருந்தது. எனினும், இறுதி வரை அது உணவு உட்கொள்ளவில்லை.