விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உறுதியாகும்பட்சத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘விக்ரம்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜயுடன் கைகோக்கிறார். கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ‘விஜய் 67’ என அழைக்கப்படும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவர் தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் – விஜய்யும் இணையும் ‘விஜய்67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் நடிகை சமந்தா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் கூறப்பட்டது. தற்போது, மற்றொரு அப்டேட்டாக நடிகை த்ரிஷா, விஜய்யின் மனைவியாக இப்படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியாக அவர் விஜயுடன் இணைந்து 2008ஆம் ஆண்டு வெளியான ‘குருவி’ படத்தில் நடித்திருந்தார். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை த்ரிஷா நடிக்கும் 5வது படம் இது என்பதும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைய உள்ளதும் கூடுதல் தகவல். முன்னதாக ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ படங்களில் விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.