பழுதடைந்த தனது பல்லை சிகிச்சை நிலையத்தில் பிடுங்கி, அந்த பல்லை எடுத்து வந்த ஒருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது பல்லை, யானை முத்து என்றும், அவரை புதையல் திருடன் என்றும் நினைத்தே பொலிசார் தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.
கண்டியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கண்டி, தலதா மாளிகையில் எசல பெரஹரா தற்போது நடந்து வருகிறது. இதனால் அங்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கண்டி புறநகர் பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சில நாட்களாக தொடர் பல் வலி இருந்து வந்துள்ளது. அது பொறுக்க முடியாத நிலையை அடைந்ததும், சிகிச்சை பெற முடிவு செய்தார்.
சில நாட்களின் முன்னர், பல் வைத்தியரிடம் சிகிச்சை பெற சென்றார். அத்துடன், நகரில் தனது வர்த்தக தேவைக்காக வாகன உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்து கொண்டு வீடு திரும்ப திட்டமிட்டார்.
முதலில் தனியார் பல் சிகிச்சை நிலையமொன்றில், வைத்தியரை சந்தித்தார். அவரை பரிசோதித்த வைத்தியர், பல பழுதடைந்து விட்டதை குறிப்பிட்டு, உடனடியாக அதனை அகற்ற வேண்டுமென்றார்.
பல்லை அகற்ற வர்த்தகர் விரும்பவில்லை. எனினும், வைத்தியரின் அறிவுறுத்தலையடுத்து, பல்லை அகற்ற சம்மதித்தார்.
சிகிச்சையின் பின்னர், அகற்றப்பட்ட பல்லை தன்னிடம் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டார். அதனை சிறிய பொலித்தீனில் சுற்றி தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.
நகரில் வாகன உதிரிப்பாகம் வாங்க பயணித்துக் கொண்டிருந்த போது, E.L.சேனநாயக்க வீதியில் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார், அனைவரையும் முழுமையாக சோதனையிட்டனர். வர்த்தகரையும் சோதனையிட்டனர்.
வர்த்தகரின் சட்டைப் பைக்குள் இருந்த பல்லை பொலிஸார் கண்டறிந்து, அவரிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் ரூ.500,000 பணமும் இருந்தது. பின்னர், மேலதிக விசாரணைக்கென பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பல் வைத்தியரிடம் சென்றது, சிகிச்சை ஆவணங்களை காண்பித்த பின்னர், சிறிது நேரத்தின் பின்னர் தொழிலதிபர் விடுவிக்கப்பட்டார்.
தன்னை புதையல் திருடன் என்றும், தன்னிடமிருந்தது யானை முத்து என சந்தேகிக்கப்பட்டடு, பொலிசார் தன்னிடம் விசாரணை செய்ததாக வர்த்தகர் கூறினார்.
பொலிஸாரின் நீண்ட விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்ததால், வாகன உதிரிப்பாகங்களை வாங்க முடியாமல் வீடு திரும்பியதாக தெரிவித்தார்.