ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் ஒப்படைக்கப்பட்ட பணம், பொது பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தொலைபேசி அழைப்பின் பதிவுகளை ஒப்படைக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சேவை வழங்குனருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். .
அந்த பதிவை போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு இயக்குனரிடம் ஒப்படைக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வகத்தின் பொறுப்பதிகாரி தொலைபேசி உரையாடல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
17.8 மில்லியன் ரூபா பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட மறுநாளே அமைச்சர் திரன் அலஸிடம் பணத்தை கையளிக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அத்தியட்சகர் டி.எஸ்.விக்ரமசிங்க நேற்று (5) நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதிவு செய்த குறிப்புகளின் அடிப்படையில் SP விக்ரமசிங்க நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்பித்தார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டது முதல் நீதிமன்றத்தில் தொகையை சமர்ப்பிக்கும் வரையிலான காலத்தில் நடந்தவை தொடர்பான அறிக்கையை பொலிஸ் மா அதிபர் சமர்பிப்பார் என்றும் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
பணத்தை பெற்றுக்கொண்டது முதல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது வரையான
நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்த எஸ்.பி. விக்கிரமசிங்க, பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபாவை, நீதிமன்ற உத்தரவுக்கமைய ஜூலை 29 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையளித்தார்.
இந்த பணத்தை கையளித்த குற்றச்சாட்டில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.