சவுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் குற்றச்செயல்கள் தொடர்புபடவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அஸ்ரா அப்துல்லா அல்செஹ்லி (24), அவரது சகோதரி அமால் அப்துல்லா அல்செஹ்லி (23) ஆகியோர் ஜூன் 7 ஆம் திகதி தென்மேற்கு புறநகர் பகுதியான கேன்டர்பரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தனி படுக்கையறைகளில் இறந்து கிடந்தனர்.
அவர்களின் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்பட்டன. இதனால், அவர்களின் மரணத்துக்கு காரணத்தை கண்டறிய முடியாமல் சிட்னி பொலிஸார் தவித்து வந்தனர்.
அவர்கள் மே மாதமே இறந்திருக்கலாமென கருதப்படுகிறது.
அந்தச் சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு அவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிய முயற்சித்தனர். இரு மாதங்களுக்கு மேலாக அந்தச் சகோதரிகள் மரணத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அவர்களின் மரணத்தில் சிறிய துப்பு ஒன்று பொலிஸாருக்கு தற்போது கிடைத்துள்ளது.
புதுமைப் பாலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், அந்தச் சகோதரிகள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் நடந்த புதுமைப் பாலினத்தவர் நிகழ்வில் கண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
பொலிஸாரிடம் அந்தப் பெண் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சகோதரிகள் இருவரும் தனியாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தயக்கம் இருந்தது. நான் அவர்களிடம் சென்று பேசியபோது அவர்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். சவுதியில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று என்னிடம் கூறினார்கள். நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் ஒரு வார்த்தையில்தான் பதிலளித்தார்கள். அவர்கள் சிட்னி வந்த பிறகுதான் சுதந்திரத்தை உணர்வதாக தெரிவித்தார்கள். சிட்னியில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க இருப்பதாக தெரிவித்தார்கள். அந்தச் சகோதரிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்றார்.
தங்களது பாலினம் சார்ந்த அச்சத்தில் சகோதரிகள் இருவரும் தங்கள் தாய்நாடான சவுதியிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியுள்ளனர். இந்தச் சூழலில் தங்கள் பாலினம் குறித்த அச்சத்தில் தங்களை மாய்த்துக் கொண்டனரா என்ற கோணத்திலும் அவுஸ்திரேலிய போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, 2018 இல் மூத்த சகோதரியுடன் உறவில் இருந்த இளைஞன் வீட்டு வன்முறையில் ஈடுபட்டதாக முறையிடப்பட்டது. பின்னர் அந்த முறைப்பாடு திரும்பப் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட இளைஞன் சவுதி அல்ல, மேலும் சகோதரிகளுடன் சமீபகாலமாக எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
அவர்கள் 2020 இல் கேன்டர்பரிக்கு குடிபெயர்ந்தனர். சமீப மாதங்களில், பெண்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்.
“இரண்டு கார்களுக்கு இடையில்” சந்தேகத்திற்கிடமான ஒருவர் பதுங்கியிருப்பதைக் கண்டதாக அவர்கள் கட்டிட மேலாளர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும், அவர் “சந்தேகத்திற்குரியவர்” என்று பரிந்துரைக்க எதுவும் இல்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
தங்கள் உணவில் விசம் கலக்கப்பட்டிரக்கலாமென அவர்கள் அச்சமடைந்திருந்தனர். அவர்கள் காரணமில்லாத அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர் என குடியிருப்பில் வசத்த பெண்ணொருவர் கூறினார்.
அதிகாரிகளிடம் பேசுவதற்கு அல்லது அவர்களின் வீட்டுக் கதவைத் திறப்பதற்குக்கூட அவர்கள் தயக்கம் காட்டினார்கள். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்து மார்ச் மாதத்தில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. பொலிசார் அங்கு வந்த போது, “இல்லை நாங்கள் நலமாக இருக்கிறோம்” என்றும், அவர்களுக்கு உதவி தேவையில்லை என்று கூறினர்.
இருப்பினும், அவர்கள் “எந்த காரணத்திற்காகவோ மிகவும் பயந்தவர்களாகவும் வருத்தமாகவும் காணப்பட்டனர்” என்று ஒரு சாட்சி கூறினார்.
ஜூன் மாத தொடக்கத்தில் வாடகை செலுத்தத் தவறியதைக் குறித்து விசாரிக்க ஷெரிப் அலுவலகத்தினர் வந்த போது, சகோதரிகளின் சிதைந்த உடல்கள் அவர்களது சிறிய குடியிருப்பில் தனித்தனி படுக்கையறைகளில் காணப்பட்டன. தென்மேற்கு சிட்னியின் பரபரப்பான சாலைகளில் ஒன்றின் அருகே 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ஒரு தொகுதியில் ஒரு மாதமாக அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படாமல் கிடந்தன.
சவுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அந்தச் சகோதரிகளின் மரணம் குறித்து சவுதி மனித உரிமை ஆணையம் கூறும்போது, “குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் சவுதி பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.