இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து பிரபல யூடியூபரை திருமணம் செய்வதாக ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை திவ்ய பாரதி மீது ஏற்கனவே இரு புகார்கள் இருப்பதாகவும் பல ஆண்களை அவர் ஏமாற்றி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்கிற ஆனந்தராஜா. சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
இதில் நடிப்பதற்காக ஆட்களை தேடியபோது, துணை நடிகர் ஏஜென்ட் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட, இருவருக்குமான நெருக்கம் அதிகமாகியுள்ளது. திவ்யபாரதி பகலவன் ராஜாவிடம் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். அப்போது திவ்ய பாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்கள் தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்று திவ்யபாரதி கூறிய நிலையில், பகலவன் ராஜா அவரை காதலித்து வந்துள்ளார்.
இதனையறிந்த பகலவன் ராஜா தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால் திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். ஒவ்வொரு முறை திருமண பேச்சு எடுக்கும்போதும் ஏதாவது காரணம்கூறி தடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கு என மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் பகலவன் ராஜா கொடுத்து வந்துள்ளார். மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் எனவும் ஒன்பது லட்சம் கேட்டு வாங்கியுள்ளார். அதோடு பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறி எட்டு பவுன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார் திவ்யபாரதி.
இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யபாரதியை பற்றி விசாரிக்க, அவரின் முழு விவரங்கள் அதன் பிறகே தெரியவந்துள்ளன. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும் அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் என்பதும் அதன் பிறகே தெரிய வந்தது.
தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்தார். இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திவ்யபாரதி குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய போதே திவ்யபாரதி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை ஏமாற்றி அவர்களிடம் பணத்தைப் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஏற்கனவே இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த புகார்கள் நிலுவையில் உள்ளது. தற்போது பகலவன் ராஜா அளித்துள்ள புகார் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.