29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

அரசியல் கைதிகள், காணி விடுவிப்பிற்கு ரணில் இணக்கம்: தேசிய அரசியல் இணைய உடனடி வாய்ப்பில்லையென்று நேரில் சொன்னது கூட்டமைப்பு!

ஜனாதிபதி பதவியின் மூலம் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை உடனடியாக தீருங்கள். அரசியலமைப்பு விவகாரங்களை பின்னர் கவனிக்கலாம். சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாமல், ஆதரிக்கக்கூடிய விடயங்களைஆதரிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (3) தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்குமிடையிலான கலந்துரையாடல் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு ஆரம்பித்த கலந்துரையாடல் சுமார் 1.30 மணித்தியாலங்கள் நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரா.சம்பந்தன், த.கலையரசன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, கைப்பற்றப்பட்ட காணிகள் மீளளிப்பது, புதிய காணிகளை அபகரிப்பதை தடுத்து நிறுத்துவதை தடுக்கும் கோரிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

நல்லாட்சி காலத்தில் காணி அபகரிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததை போல, இப்போதும் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென கோரினர்.

இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, உடனடியாக சகல விதமான காணி அபகரிப்பையும் தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.

அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரச்சனைகளை தீர்ப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும், ஜனாதிபதி பதவியின் மூலம் நிறைவேற்றக்கூடிய விவகாரங்களை செய்து முடிக்கும்படி கூட்டமைப்பு கோரியது.

குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தம்படி கூட்டமைப்பு கோரியது. அதை உடனடியாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் அரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதன்போது, கருத்து தெரிவித்த த.சித்தார்த்தன்- தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை அரசு அல்லது தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பில்லை. எனினும், அரசாங்கம் சரியாக செயற்பட்டால் வெளியிலிருந்து ஆதரவளிப்போம். அதற்கு முன்னதாக, தமிழ் மக்களிற்கு நம்பிக்கையேற்படுத்தும் விடயங்களை அரசு செய்ய வேண்டும். அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு போன்றவற்றை செய்ய வேண்டுமென்றார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், ‘இரா.சம்பந்தன் என்னிடம் சொல்லி விட்டார், தேசிய அனைத்துக்கட்சி வேலைத்த்திட்டத்தின் உருவாக்கத்தை அவதானித்து, அதன் பின்னர் எமது கட்சி கூடி தீர்மானம் எடுக்கும்’ என்றார்.

இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் வரவேற்கத்தக்க விடயங்கள் பல இருந்தன. எனினும், கிழக்கு மக்களை கவலையில் ஆழ்த்தும் ஒரு விடயம் இருந்தது. ஜனாதிபதி தனது உரையில் வடக்கு அபிவிருத்தி என்றுதான் குறிப்பிட்டார். எனினும், யுத்தத்தில் வடக்கும், கிழக்கும் மோசமாக பாதிக்கப்பட்டன. அபிவிருத்தியில் கிழக்கு மாகாணத்திற்கும் சமமான முன்னுரிமைளிக்க வேண்டுமென்றார்.

தனது உரையில் தவறுதலாக கிழக்கு விடுவிக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த விடயத்தை சுட்டிக்காட்டியது நல்ல விடயம் என குறிப்பிட்டு, இரண்டு மாகாணங்களின் அபிவிருத்தியையும் சமமாக மேற்கொள்வோம் என்றார்.

கலந்துரையாடலின் இறுதிக்கட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

எனினும், ஜனாதிபதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரம், அரசியல் சம்பந்தப்பட்டதல்ல, சட்டமா அதிபர், நீதிமன்றம் சம்பந்தப்பட்டது, அந்த தரப்பினரே அதை கையாள்கிறார்கள் என்றார்.

போராட்டக்காரர்களிற்கு தடையில்லையென்றும், வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்களே கைதாகிறார்கள் என்றும், போராட்டக்காரர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் போராடலாம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!