யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் நிரப்புவதற்கான வரிசையில் இடம்பிடித்து கொடுப்பதற்கு ரூ.500 அறவிடப்பட்டு வருகிறது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக அனைத்து பொருட்களிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மிகப்பெருமளவில் நீடிக்கிறது. எரிபொருள் வரிசையை கட்டுப்படுத்தவும், எரிபொருள் பதுக்கலை கட்டுப்படுத்தவும் கியூஆர் குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் வழங்கல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எனினும், எரிபொருள் வரிசையில் சற்றும் குறைவு ஏற்படவில்லை. மாறாக, முதல் நாள் இரவிலிருந்து வரிசையில் நின்றாலே, மறுநாள் எரிபொருள் பெறலாம் என்ற நிலையே பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், எரிபொருள் வரிசையில் இடம்பிடித்து கொடுப்பதற்கு பணம் வசூலிக்கும் புதிய தொழில் பரவலாக ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண நிலவரப்படி, வரிசையில் இடம்பிடித்து கொடுப்பதற்கு ஒருவரிடம் குறைந்தது ரூ.500 அறவிடப்படுகிறது.
முதல் நாள் இரவே, வரிசைகளில் கல், சைக்கிள், மரக்கிளை அல்லது குற்றி என்பவற்றை இட்டு, வரிசையில் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். மறுநாள் காலையில் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கும் சமயத்தில் அந்த இடங்களை பணம் செலுத்தி பெற முடியும்.
அனேகமாக நாட்கூலி, சிறு நடமாடும் வியாபாரங்களில் ஈடுபட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களே இந்த தரகர்களாக செயற்படுகிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இந்த தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது