சீனாவின் உளவு கப்பல், இலங்கை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வரவுள்ளதால், தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், ஓகஸ்ட’11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது. 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டையில் தரித்திருக்கும்.
இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
சீன கப்பலின் இந்தப் பயணம் தொடர்பாக, இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான ‘றோ’ மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அலுவலகத்தில் சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் விவாதம் நடந்துள்ளது.
தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்கள்உள்ளன. அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் ஆறு முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இதையடுத்து, மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.




