ரூ.15,000 பணம் மற்றும் ஒரு கிராம் ஹெரோயினுக்காக 15 வயது சிறுமியை விற்பனை செய்த, சகோதரியும், ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொட பொலிசார் தெரிவித்தனர்.
15வயது சிறுமியை வாங்கியவர் சகோதரியிடம் ரூ.15,000 பணமும், ஒரு கிராம் ஹெரோயினும் வழங்கியுள்ளார்.
5120 மில்லி கிராம் ஹெரோயினுடன் கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே, தனது சகோதரியை விற்பனை செய்துள்ளார்.
இந்த சிறுமியின் தாயார், ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.
சிறுமியை விற்ற சகோதரி ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாய் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் குறித்த நபரே சிறுமியை பராமரித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேற்கு நில்பனகொடவில் வசிக்கும் சந்தேகநபர் ஹெரோயின் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீடு சோதனையிடப்பட்டு 5120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் வீட்டில் இருந்த சிறுமி யார் என்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த சந்தேக நபரின் தாயார், சம்பவத்தை வெளிப்படுத்தியதுடன், சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்து, சிறுமியை விற்றதாக கூறப்படும் சந்தேக நபரின் சகோதரியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.




