பிரான்ஸில் இலங்கைத் தமிழர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Le Touquet கடற்கரையில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு இடம்பெற்றது. உயிரிழந்தவர் பாரிஸின் புறநகராகிய Aulnay-sous-Bois பகுதியைச் சேர்ந்த 47 வயதான இலங்கைப் பிரஜை ஆவார்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கடற்கரைக்கு நீராடச் சென்றிருந்த சமயத்திலேயே இரவு 21-22 மணிக்கு இடையே அவர் நீரில் மூழ்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை முதலில் பெண் ஒருவரேகண்டு அபயக்குரல் எழுப்பியுள்ளார்.
உடனடியாக இளைஞர் குழு ஒன்று அவருக்கு உதவ முயன்றபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சுவாசம் மற்றும் இதயச் செயலிழப்புக் காரணமாக அவருக்கு மரணம் நிகழ்ந்துள்ளதாக பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடும் வெப்பம் காரணமாகப் பெரும் எண்ணிக்கையானவர்கள் கடற்கரைகளை நாடிச் செல்கின்றனர். இதனால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.