முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல, முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் தலைமறைவாக இருக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ வீசா பெற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட சில தகவல்கள் கூறுவது போல் புகலிடம் கோரவில்லை என்றார்.
கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு மற்றும் ஓகஸ்ட் மாதம் அவர் இலங்கை திரும்புவதாக வெளியான செய்திகள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் சுட்டிக்காட்டிய விடயங்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவார் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாற்றங்கள் ஏற்பட்டால் உரிய அதிகாரிகளினால் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு அரசியல் முன்னணியில், முன்னாள் ஜனாதிபதி தொடர்பான பயணத் திட்டங்கள் அல்லது அவர் நாடு திரும்புவதற்கான குறிப்பிட்ட திகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.