முறையற்ற எரிபொருள் விநியோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்களால் வடமாகாண ஆளுனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று சாவகச்சேரியிலுள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிசாரால் விரட்டப்பட்டதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் அவமரியாதைக்குள்ளாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தாலும், பொலிசார், கூட்டுறவு சங்க உத்தியோகத்தர்கள், பொதுமக்களிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்டளவானவர்களிற்கே எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
இது குறித்து விளக்கம் கோர முயன்ற போது, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அவமரியாதைக்குள்ளாக்கியதுடன், சுகாதார ஊழியர்களை பொலிசார் விரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி தவிர்ந்த வெளிப்பிரதேசங்களை சேர்ந்த சுகாதார ஊழியர்களும் அங்கு எரிபொருள் நிரப்பியுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பணிப்பாளரே எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கமைக்கின்ற போதும், அவரது நிர்வாக பலவீனமும் சிக்கலிற்கு ஒரு காரணமாக உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.