சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ராஜபக்ஷ ஆதரவு தரப்பினருக்கும், சுயாதீனமாக இயங்க தயாராகும் தரப்பினருக்குமிடையில் பகிரங்க மோதல் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ஷ தரப்பினரின் விருப்பத்திற்கிணங்க, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானத்தை, சுயாதீன தரப்புக்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கே என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் நேற்று அறிவித்தார். ராஜபக்ஷக்களின் நெருக்கமான நபராக அறியப்படும் அவரது அறிவிப்பு வெளியான உடனேயே, இது கட்சியின் தீர்மானமா என்ற சந்தேகம் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருந்தது.
இதை உறுதி செய்த கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவையே ஆதரிக்க வேண்டுமென அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில், கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திற்கு, கட்சி தலைவர் பீரிஸ் இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
(i) எந்த அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது;
(ii) இந்த முடிவை எடுப்பதில் பங்கெடுத்ததாகக் கூறப்படும் நபர்களின் பெயர்கள்;
(iil) இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை;
(iv) கூட்டத்தின் இடம், திகதி மற்றும் நேரம்;
(v) இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பு தொடர்பான விவரங்கள்
மற்றும் இந்த அறிவிப்பின் திகதி,நேரம்;
(vi) பெரமுனவின் அரசியலமைப்பின் விதிகள், எதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கேள்விகளிற்கான பதிலை உடனடியாக கோரியுள்ளார்.




