இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபிவர்தன, ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக செயற்படுவதற்கு பிரதமர் ரணிலை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 37 (01) சரத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் பதவி விலகுமாறு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வரும் நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜுலை 09ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடுத்து, இன்று தனது இராஜினாமாவை கையளிப்பதாக சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்தார். எவ்வாறாயினும், தனது இராஜினாமா தொடர்பில் எவ்வித தகவலும் இன்றி ஜனாதிபதி இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இதனடிப்படையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக சபாநாயகர் தற்போது அறிவித்துள்ளார்.