‘அவன் இவன்’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த துணை நடிகர் ராமராஜ் உடல்நலக் குறைவால் காலமானர். முதுகுளத்தூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ராமராஜ் (70). விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராமராஜ், கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வங்கியில் பணிபுரிந்தபோது சுற்றுவட்டார மேடை நாடகங்களில் கிராமியப் பாடல்களை பாடிவந்தார்.
வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நடிப்பு ஆர்வத்தின் காரணமாக சென்னை சென்றவர், இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். மேலும் 20-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் துணை மற்றும் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் கடந்த ஒரு மாதமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராமராஜ் நேற்றிரவு காலமானார். அவரது உடல் முதுகுளத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலித்து செலுத்தினர். மேலும், நடிகர்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று பகல் 3 மணியளவில் அவரது உடல் முதுகுளத்தூரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடிகர் ராமராஜுக்கு மனைவி மாணிக்கம் மற்றும் பாலசுப்பிரமணியன், ரவிசங்கர், அரவிந்த் என மூன்று மகன்கள் உள்ளனர்.