நேற்று மாலை பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நான்கு ஊடகவியலாளர்கள் மற்றும் இரண்டு ஊடக நிறுவன பணியாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்ததாக எஸ்எஸ்பி தல்துவ தெரிவித்தார்.
4 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இருவர் நேற்று மாலை தாக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டங்களை செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது.
எந்தவொரு வன்முறையையும் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாதுகாப்புப் படையினரும் மற்றும் போராட்டக்காரர்களும் நிதானத்துடன் செயல்படுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.




