இன்று அரசுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் திருகோணமலை-நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அபயபுர சந்தி, மூன்றாம் கட்டை, தபால் கந்தோர் சந்தி மற்றும் அதிகளவில் மக்கள் நடமாடும் இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கொழும்பில் இன்று (09) நடைபெற இருக்கின்ற எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை முற்றுகையிட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது நிலையில். திருகோணமலையில் அவசரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பலரையும் சந்தேகமடைய வைத்துள்ளது.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி பொதுஜன பெரமுன குண்டர்கள் அரங்கேற்றிய வன்முறையையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து பொதுஜன பெரமுனவினரை நையப்புடைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை துறந்துவிட்டு, அலரி மாளிகையிலிருந்து தப்பிச் சென்று, திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருந்தார்.
இதேபோன்று இன்று நடைபெற உள்ள எதிர்ப்பின் போது மீண்டும் அரசியல் புள்ளிகளை பாதுகாக்கும் நோக்கில் திருகோணமலைக்கு அழைத்து வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இவ்வாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.