காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் லீனா மணிமேகலை. அவர் மீது டெல்லி காவல்துறையின் நுண்ணறிவு மற்றும் ஸ்ட்ராடஜிக் ஆப்பரேஷன்ஸ் பிரிவினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
லீனாவின் ட்விட்டர் பகிர்வு மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்கள் இடையே வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
லீனாவின் ட்விட்டர் பதிவு குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “லீனாவின் கருத்து மதம், இனம் சார்ந்த பல்வேறு குழுக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்தப் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக சில பகுதிகளில் மத ரீதியிலான பிரச்சினைகளால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற பதிவுகள் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.
லீனா மீது பாஜக தலைவர் சிவம் சப்ரா போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அவரைப் போலவே நிறைய பேர் புகார் கூறியிருந்தனர். ஹரியாணா பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் அருண் யாதவ் அளித்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகரை சைபர் செல்லுக்கு மாற்றியுள்ளனர். நாடு முழுவதும் லீனா மீது வழக்குகள் பாய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.