மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர்.
அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக குறித்த கரடியின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எரிபொருள் பிரச்சனை காரணமாக கரடியை பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இரவு நேரங்களில் கரடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதாகவும் அதிகாலை நேரங்களில் நடமாடும் மக்களை தாக்குவதாகும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் மிருக கடிக்குரிய மருந்து தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக இக் கரடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று மக்களை தாக்குவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு மன்னார் பிரதான காலப்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மீதும் கரடி தாக்கிய நிலையில்,குறித்த நபர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கடந்த 27 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் குறித்த கரடி நானாட்டான் பிரதேச செயலக பிரதான வீதியில் நடமாடுவதையும்,குறித்த கரடியை கண்ட நாய்கள் ஓடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
குறித்த பகுதியில் கரடியின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ள CCTV கமராவில் பதிவாகி உள்ளது.