50 வருடங்களாக நகைக் கொள்ளையில் ஈடுபட்டு, அதில் கிடைத்த லட்சங்களை வட்டிக்குவிட்டு, பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் 70 வயது காதல் தாத்தா
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் நகைக் கொள்ளையும், தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களிடம் தாலி, சங்கிலி பறிப்பும் தொடர்ந்து நடந்து வந்தன. குறிப்பாக, கடந்த ஏப்ரல் இறுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்த வீடுகளிலிருந்த பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியது. குற்றவாளி குறித்து சின்ன ‘க்ளூ’கூட கிடைக்காமல் போலீஸாரும் திணறிப்போயினர்.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ரவளி பிரியாவின் நேரடி மேற்பார்வையில், எஸ்.ஐ சந்திரசேகரன் தலைமையில் அமைக்கப் பட்ட தனிப்படை போலீஸார், நான்கு மாத தீவிர தேடுதலுக்குப் பிறகு 70 வயது முதியவர் பழனியாண்டியைக் கைதுசெய்துள்ளனர்.
50 வருடங்களாகத் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த பழனியாண்டி, விசாரணையில் சொன்ன தகவல்கள் போலீஸாரையே பொறாமைப்பட வைத்திருக்கின்றன.
இது குறித்து தனிப்படை போலீஸார் தெரிவித்ததாவது. “கமுதி அருகேயுள்ள செய்யாமங்கலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பழனியாண்டி, பிழைக்க வழியில்லாததால் 18 வயதில் தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்களம் கிராமத்துக்கு வந்திருக்கிறார். ஆடு, மாடு மேய்க்கும் கூலி வேலை செய்தவர், அந்த வயதிலே சின்னச் சின்னத் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். 20 வயதில் சொந்த மாவட்டத்துக்குப் போய் திருமணம் செய்துகொண்டவர், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி போன்ற பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் சிக்கி, சிறைக்குப் போயிருக்கிறார்.
வெளியே வந்த பிறகு குடும்பத்தை நிரந்தரமாகப் பிரிந்தவர், 1987இல் பட்டுக் கோட்டைக்குச் சென்று ரிக்ஷா ஓட்டியிருக்கிறார். மாணவிகளை ரிக்ஷாவில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் போட்டிருக்கும் கொலுசு, நகைகளைத் திருடிய வழக்கில் மீண்டும் சிறைக்குப் போனார். விடுதலையான பிறகு கடைசியாக குலமங்களத்துக்கே திரும்பியவர், நல்லவர் போல பகலில் ஆடு, மாடு மேய்த்துவிட்டு, இரவில் கைவரிசை காட்டியிருக்கிறார்.
50 வருடத் தொழில் நுணுக்கம், தனக்கென குடும்பமோ, நிலையான இருப்பிடமோ இல்லாதது, டூ வீலர் இல்லாதது, செல்போன் பயன்படுத்தாதது போன்றவை அவருக்குச் சாதகமாகிவிட, போலீஸாரிடம் மாட்டாமலேயே இருந்திருக்கிறார். வீட்டுக்கு வெளியே அசந்து தூங்கும் பெண்கள், ஆளில்லாத வீடு, பூட்டப்பட்ட கடைகள் இவைதான் அவரின் டார்கெட். நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கினால் 3 மணிக்குள் திருட்டை முடித்துவிட்டு அந்த ஏரியாவிலிருந்தே மாயமாகி விடுவார்.
திருடிய நகைகளை அவரே நேரடியாக விற்காமல் தன்னுடன் தொடர்பிலிருக்கும் சில ஆண்கள், பெண்களிடம் கொடுத்து விற்கச் சொல்வார். அதற்கு அவர்களுக்கு 5,000 வரை கமிஷன் கொடுப்பார். திருடிச் சம்பாதித்த பணத்தில் ரூ. 10 லட்சம் வரை வட்டிக்கு விட்டிருக்கிறார். எந்த நேரமும் அவன் கையில் பணம் புழங்கியதால், பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, கறி… மீன்… கசமுசா என்று உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார். பெண்கள் என்ன கேட்டாலும் ஏன் எதுக்கு என்று கேட்காமல் அள்ளிக்கொடுப்பது அவரது பாலிசி. பல சமயம் திருடிய நகைகளை அப்படியே கொடுத்து, சில பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாராம். ஒரே ஏரியாவில் பல பெண்களிடம் ‘பழகினாலும்’, நம்மீது மட்டும்தான் பாசமாக இருக்கிறார் என்று பெண்கள் நம்பும்படி நடித்திருக்கிறார். வயதானவர் என்பதால் ஆண்களுக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை!
கிட்டத்தட்ட 50 வருடங்களாக திருட்டுத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர், வெறும் ஐந்து தடவை மட்டுமே போலீஸில் சிக்கியிருக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன்னால் ஆலத்தூர் கிராமத்தில் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் தாலி, சங்கிலி திருடப்பட்ட வழக்கில்தான் பழைய குற்றவாளிகளை லிஸ்ட் எடுத்து விசாரணை மேற்கொண்டோம். எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.
2021.ல் ஒரு கடை திருட்டில் பதிவான சிசிடிவி காட்சி, ஆலத்தூரில் கொள்ளையடித்துவிட்டுப்போன உருவத்துடன் ஒத்துப்போனது. அந்த போட்டோவை தமிழ்நாட்டிலுள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பித்தான் இவரைப் பிடித்தோம்” என்றனர்.
தனிப்படை எஸ்.ஐ சந்திரசேகரன் தெரிவித்த போது. “50 வருடங்களாகத் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த பழனியாண்டியை, திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறோம். அவரிடமிருந்து 20 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கஸ்டடி எடுத்து விசாரித்தால்தான், அவர் கடந்த சில வருடங்களில் கொள்ளையடித்த நகைகளின் மொத்த மதிப்பு, அதை யார் யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறார் என்பது குறித்த விவரம் தெரியவரும்” என்றார்.