பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது கடிதத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது கவலை தருகிறது. ஆனால், இதே நிலையில் தொடர முடியாது என்பதால் வெளியேறுகிறேன். அரசாங்கம் ஒழுங்காக, சிரத்தையுடன், திறம்பட நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு வாய்ப்பில்லை என்பதால் நான் ராஜினாமா செய்கிறேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் கனவை தொடர்வாரா?
ரிஷி சுனக், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் அவர் முன்நின்றார். ஆனால், மனைவி அக்ஷதா மீதான வரி ஏய்ப்பு புகார்களால் மக்கள் செல்வாக்கில் எதிர்பாராத சரிவு கண்டார். இதனையடுத்து அவர், தீவிர அரசியலில் இருந்து விலகப்போகிறார்’ என்று லண்டன் ஊடகங்கள் கூறின. ஆனால், தனது கடும் உழைப்பால் இளம் வயதிலேயே பிரிட்டன் பிரதமர் நாற்காலியை நோக்கி முன்னேறிய ரிஷி சுனக், அரசியல் போரில் அவ்வளவு எளிதில் பின்வாங்க மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் சுகாதாரத் துறை அமைச்சர் சாஜித் ஜாவேத், நான் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் எனது ராஜினாமா பற்றி தெரிவித்துவிட்டேன். நான் இதை சொல்வதில் வேதனைப்படுகிறேன், ஆனால், உங்கள் தலைமையின் கீழ் எதுவும் மாறாது என்பது தெளிவாகிவிட்டது. ஆகையால் நீங்கள் எனது நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள் என்று கூறினார்.
எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசாங்கப் பதவிக்கு நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த இராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன.
இந்த நிலையில், நாட்டின் புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஸ்டீவ் பார்க்லேவசவிடம் சுகாதார அமைச்சர் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி அமைச்சர் மிஷெல் டோனலன் கல்வி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.