துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விலக தீர்மானித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பதவியில் இருந்து விலகுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
விமானப் போக்குவரத்து அமைச்சுமீது தனியார் நிறுவனமொன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் வரை, அமைச்சர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்து உரிய கடிதம் வரும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.