“என்னைப் பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக்கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்திருக்கிறார்.
கவிஞர் லீனா மணிமேகலை ‘பறை’, ‘தேவதைகள்’, ‘பலிபீடம்’ உட்பட சில ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் ‘காளி’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டிருந்தார்.
அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, தன்பால் ஈர்ப்பாளர்களின் (LGBT) கொடியை கையில் பிடித்திருக்கிறார். இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இது, இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, பாஜகவினர், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி ட்விட்டரிலும் டிரெண்ட் செய்தனர்.
வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், இயக்குனர் லீலா மணிமேகலை மீதுடெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில், இயக்குநர் லீனா மணிமேகலைக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆதரவு அளித்திருக்கிறார்.
இதுகுறித்து டிவி சேனல் ஒன்றின் கேள்விக்கு, “என்னை பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான்” என பதில் அளித்துள்ளார் மஹுவா மொய்த்ரா.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் நடிகையுமான நுஷ்ரத் ஜஹான், “மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று ‘காளி’ போஸ்டர் சர்ச்சை குறித்து கூறியது குறிப்பிடத்தக்கது.