இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகாரசபை பூர்வாங்க வேலைகளை செய்துள்ளதாகவும், இந்தியாவின் எக்ஸிம் வங்கி வழங்கும் நிதி வசதியைப் பயன்படுத்தி எஞ்சிய பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“நாங்கள் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன. செய்துவிட்டோம். அப்போது, இந்திய தரப்பில் ஆலோசகர் ஒருவரை நியமித்துள்ளது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியை முன்னெடுப்போம். தற்போது சிறிய கப்பல்கள் மட்டுமே நிறுத்த முடியும். பெரிய கப்பல்கள் தங்கும் வகையில் இதை உருவாக்குவோம்,” என்றார்.
இந்திய உதவியுடன் துறைமுகத்தை மேம்படுத்தும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. மே, 2009 இல் போர் முடிவடைந்ததை அடுத்து, இது தொடர்பாக இந்தியா நிதியுதவி வழங்கியது, மேலும் சிதைவுகளை அகற்றுவது போன்ற சில பணிகள் அப்போது செய்யப்பட்டன.