இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தவறாக முகாமைத்துவம் செய்யப்படும் அபாயம் இன்னும் உள்ளது. அந்த சூழல் மாறும் வரை இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்காது என இலங்கைக்கான ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, நேற்று (29) இரவு இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹிடேகி 3 நாள் விஜயமாக நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தார். இதன்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
நேற்று இரவு கொக்குவிலில் உள்ள பொக்ஸ் தனியார் விடுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கு இராப்போசன விருந்தளித்திருந்தார். சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, ‘இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தவறாக முகாமைத்துவம் செய்யப்படும் ஆபத்து தொடர்ந்து உள்ளதாக ஜப்பான் கருதுகிறது. அதனால் இப்போதைக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்காது. இப்பொழுது உலக வங்கியுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை சில உத்தரவாதங்களை அளிக்க வேண்டியிருக்கும். சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். அதன் பின்னர் நிதியுதவி அளிப்பது பற்றி ஜப்பான் பரிசீலிக்கும்’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர்களிடம், ‘உங்கள் பிரயாணங்களிற்கு எரிபொருளை எப்படி பெற்றுக்கொள்கிறீர்கள்?’ என ஜப்பான் தூதர் ஆர்வமாக விசாரித்தறிந்து கொண்டார்.