ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாஜி வதை முகாமில் காவலராக இருந்த 101 வயது முதியவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜெர்மனியில் நடந்த இனப் படுகொலையுடன் தொடர்புடைய போர்க்குற்றங்களுக்காகத் தண்டனை பெறும் மிக வயதான நபர் இவராவார்.
1942 மற்றும் 1945 க்கு இடையில், பெர்லினுக்கு வடக்கே, ஒரானியன்பேர்க்கில் உள்ள சக்சென்ஹவுசென் முகாமில் சிறைக் காவலராகப் பணிபுரிந்தபோது, ஜோசப் ஷூட்ஸ் கொலைக்கு துணைபுரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார், தலைமை நீதிபதி உடோ லெக்டர்மேன் செவ்வாயன்று நியூருப்பின் பிராந்திய நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது 101 வயதான ஜோசப் ஷூட்ஸ் சிறைக் காவலராக பணியாற்றி, கொலை செய்யத் துணைபுரிந்ததாக நீதிபதி கூறினார்.
முகாமில் மோசமாக மக்கள் கொல்லப்படுவதைத் தாம் அறிந்திருக்கவில்லை என்று முதியவர் மன்னிப்பு கோரினார்.
நேற்று வழக்கு முடிவுக்கு வந்தபோதும்கூட “நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதை அறியவில்லை,” என்றார் அவர்.
முகாமில் 3,518 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு ஷூட்ஸ் தெரிந்தே துணைபுரிந்ததாய் சட்டத்தரணிகள் வாதிட்டனர். அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
இப்போது பிராண்டன்பேர்க் மாநிலத்தில் முதியவர் வசிக்கிறார். கடந்த ஆண்டு ஒக்டோபரில் திறக்கப்பட்ட விசாரணையில், வடகிழக்கு ஜேர்மனியில் உள்ள பேஸ்வாக் அருகே குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் பண்ணை தொழிலாளியாக பணிபுரிந்ததாக ஷூட்ஸ் கூறினார்.
எவ்வாறாயினும், அவர் 1942 மற்றும் 1945 க்கு இடையில் பெர்லின் புறநகரில் உள்ள முகாமில் நாஜி கட்சியின் துணை ராணுவப் பிரிவில் பட்டியலிடப்பட்ட உறுப்பினராக பணிபுரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதுகிறது. அப்போது அவருக்கு 21 வயது.
அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவர் சிறைக்குள் அடைக்கப்பட வாய்ப்பில்லை.
1936க்கும் 1945க்கும் இடைப்பட்ட காலத்தில் 200,000க்கும் அதிகமானோர் அந்த வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்ததாய் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் இறந்தனர், அத்துடன் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு, தூக்கில் போடுதல் மற்றும் வாயுவை வீசுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமும் இறந்தனர்.
ஷூட்ஸைப் போல ஜெர்மனியில் 90 வயதுக்கு மேற்பட்ட மேலும் பலர் கடந்த சில ஆண்டுகளில் தண்டனை பெற்றனர்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களைப் பிடித்து, வழக்கு நடத்தி தண்டிக்கவேண்டிய அவசியம் என்ன என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் தனிநபர்களின் அரசியல், ஒழுக்கப் பொறுப்புகளை மறுவலியுறுத்தவே இவ்வாறு செய்யப்படுவதாய்க் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.