திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் தொடர்பான வழக்கு, நாளை (27) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது இரண்டு பெண்களும் மனநல பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் உறவைப் பேணி வந்த இந்தியப் பெண்ணும், அட்டாளைச்சேனையை சேர்ந்த இளம் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை பெண்ணை தமிழகத்திற்கு வருமாறு இந்தியப் பெண் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்போது குடிவரவுத் திணைக்களத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளதால், அட்டாளைச்சேனை பெண்ணால் அவசரமாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியப் பெண் ஜூன் 20 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அட்டாளைச்சேனைக்குச் சென்று அங்குள்ள பெண்ணின் வீட்டில் இரவு தங்கியிருந்தார்.
அட்டாளைச்சேனை பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இரண்டு பெண்களிற்கும் இடையிலான உறவுக்கு, அட்டாளைச்சேனை பெண்ணின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இரு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா இரண்டு பெண்களையும் மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தி நாளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இரு பெண்களும் மனநல பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.