யாழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தமிழ் பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.
தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மாரடைப்பினாலேயே உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மாரடைப்பினால் ஏற்பட்ட மரணமென்பது தெரிய வந்தது.
கடந்த 19ஆம் திகதி யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட மோதலில் இந்த இளைஞனும் தாக்கப்பட்டிருந்தார்.
அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளரான இந்த இளைஞன் உள்ளிட்ட குழுவினர், நகரிலுள்ள, அங்கஜன் இராமநாதனின் உறவினரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிற்பது வழக்கமென்றும், அவ்வாறான சந்தர்ப்பமொன்றில் டீசல் பெற வந்த சாரதிகளுடன் ஏற்பட்ட தகராற்றில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் அவர் நெஞ்சு வலியென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த நிலையில், நேற்று (22) அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று பிரேதபரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் மாரடைப்பு காரணமாகவே மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இளைஞனை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட இருவர், தற்போது யாழ்ப்பாணம் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.