மக்களால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட ஆரம்பிக்கலாம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று (23) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் மற்றும் உரங்களைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எவ்வித பதிலும் இல்லை எனவும், ஜனாதிபதியும் பிரதமரும் தயக்கமின்றி பதிலளிக்க வேண்டும் எனவும், எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உடனடியாக ரஷ்ய நாட்டுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெறும் பொறுப்பை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒப்படைக்காமல் ஜனாதிபதியும், அரசாங்கமும் அதை செய்ய வேண்டும் என்றார்.
எதிர்வரும் காலங்களில் ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நாணயக்கார, ரஷ்யாவும் இந்தக் குழுவில் இணையலாம் என்றும் கூறினார்.
ரஷ்யாவில் எரிபொருள், உரம் மற்றும் எரிவாயு உள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அஞ்சுவதாகவும், அரசாங்கம் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் பொறுமை இழப்பார்கள் எனவும் நாணயக்கார தெரிவித்தார்.