அடுத்த எரிபொருள் கப்பல் எப்போது நாட்டிற்கு வரும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கையடக்க செயலியில் எரிபொருள் கிடைப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடாமல் எரிபொருள் பவுசர்கள் அனுப்பப்பட்டதன் விளைவாக நேற்றிரவு அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ சேமிப்பு முனையங்களில் இருந்து எரிபொருள் அனுப்பப்பட்ட பின்னர் பெற்றோலிய கூட்டுத்தாபன செயலியில் குறிப்பிட்ட இடங்களிற்கு வெளியே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக பாலித குற்றம் சாட்டினார்.
எரிபொருள் இறக்குமதி செய்ய 42 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் வரும் திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
85% நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்றும், வரிசைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதற்காக அல்லாமல், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கவும் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதாக பாலித தெரிவித்துள்ளார்.