இஸ்லாமியர்களின் இறைத்தூதராகிய நபிகள் நாயகத்தை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 26-ல் இந்தி தொலைக்காட்சி சேனல்களில் வழக்கம்போல் பாஜக செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா கலந்து கொண்டார். ஆனால், அன்றைய தினம் அவர் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபியை தவறாக விமர்சனம் செய்திருந்தார். இதனால், முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் இந்தியாவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவிலும் முஸ்லிம்கள் போராட்டம் தொடங்கினர்.
இதன்காரணமாக, நூபுர் சர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது பாஜக. எனினும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தவகையில் கடந்த 10ஆம் தேதி கான்பூரில் நடைபெற்ற முஸ்லிம்களின் ஆர்பாட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதேநிலை, அம்மாநிலத்தின் பிரயாக்ராஜ், பரேலி, சஹரான்பூர், முராதாபாத், கன்னோஜ், ஹாத்தரஸ் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளிலும் ஏற்பட்டது.
இப்பிரச்சினையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த உ.பி. போலீஸார் 357 முஸ்லிம்களை கைது செய்தனர். மகராஷ்டிராவின் ஆசிரியரான முகம்மது குப்ரான் கான் என்பவர் மீது மும்பையின் தானே, பிதோய் ஆகிய காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, டெல்லியிலுள்ள நூபுர் சர்மா மீது அங்கு வழக்குகள் பதிவாகி இருந்தன. இதன் விசாரணைக்காக மும்பை போலீஸார் நுபுர் சர்மாவிற்கு நேரில் ஆஜராக நோட்டீஸும் அளித்திருந்தனர். இதனிடையே, மும்பை பைதோனி போலீஸார் நூபுர் சர்மாவை நேரில் விசாரிக்க நேற்று டெல்லி வந்தனர்.
4 நாட்களாகக் காணவில்லை: மும்பை பைதோனி போலீஸார் மே 29 ஆம் தேதியன்று மும்பை ராசா அகாடமியின் இணைச் செயலாளர் இர்ஃபான் ஷேக் அளித்தப் புகாரின் பேரில் நூபுர் சர்மா மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்துதல், விரோதத்தை தூண்டுதல், பொதுவெளியில் விஷமம் செய்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரை ஜூன் 25ல் நேரில் ஆஜராகும்படியும் பைதோனி போலீஸ் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாகவே நூபுர் சர்மாவைக் காணவில்லை என்பது நேரில் விசாரணை நடத்த டெல்லி வந்த நிலையில் தெரிந்து கொண்டதாக மும்பை பைதோனி போலீஸார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நூபுர் சர்மா கூறியிருந்த நிலையில் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அப்படியான சூழலில் அவரைக் காணவில்லை என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.