எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள பொலிஸார் முயற்சித்த போது பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.
கலவரங்களைத் தடுப்பது, குற்றவாளிகளைக் கைது செய்தல், போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கியக் கடமைகளை நிறைவேற்றும் அத்தியாவசிய சேவையாக பொலிஸார் திகழ்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, பொலிஸாருக்கு எவ்வித இடையூறும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார்.
பொலிஸாருக்கு எரிபொருள் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த எஸ்.எஸ்.பி தல்துவ, பொலிஸாருக்கு தனியான எரிபொருள் இருப்பு ஒதுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது என்றார்.
பொலிசார் 24 மணி நேரமும் கடமைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மற்ற அரச உத்தியோகத்தர்கள் அனுபவிக்கும் பல சலுகைகளை பொலசார் பெறுவதில்லை என்றும் அவர் கூறினார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதன் மூலம் பொதுமக்களே பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.




