அத்தியாவசியமற்ற துறைகளில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையை மூன்று மாதங்களுக்கு விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களைத் தவிர மிகுதி அனைத்து அரச நிறுவனங்களையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, தனியார் போக்குவரத்திற்கும் எரிபொருளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, வெள்ளிக்கிழமைகளில் தங்கள் வீட்டு முற்றங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை அரச ஊழியர்கள் பெறுவார்கள்.