அணித்தலைவர் தசுன் சானகவின் அசாத்தியமான துடுப்பாட்டத்தின் மூலம், அவுஸ்திரேலியாவிற்க எதிரான கடைசி ரி20 போட்டியில் இலங்கை அணி, ஒரு பந்து மீதமிருக்க 4 விக்கெட்களால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
அணித்தலைவர் தசுன் சானக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 54 ஓட்டங்கள் பெற்றார்.
கண்டி, பல்லேகல மைதானத்தில் நடந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வோர்னர் 39, மார்கஸ் ஸ்டேனிஸ் 38, ஸ்ரிபன் ஸ்மித் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
177 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடையும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், கடைசிக்கட்டத்தில் அணித்தலைவர் தசுன் சானக நிகழ்த்திய வான வேடிக்கை இலங்கையை வெற்றிபெற வைத்தது.
தசுன் சானக 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
கடைசி ஐந்து ஓவர்களில் சானக – சம்மிக்க கருணாரத்ன ஜோடி 75 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை வெற்றி பெற கடைசி 3 ஓவர்களில் 59 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது சானக 12 பந்துகளை சந்தித்து வெறும் 6 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.
ஆனால், கடைசி 3 ஓவர்களில் சானக சன்னதம் கொண்டு ஆடினார். அடுத்த 13 பந்துகளில் 48 ரன்களை விளாசினார், ஜோஷ் ஹேசில்வுட், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் ஆகிய பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தார்.
கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது.சானகா ஓஃப்சைட்டில் பலவீனமானர் என்பதால், ஓஃப் சைட்டில் பந்துவீசினர். முதல் இரண்டு பந்துகள் வைட் ஆகி, இலங்கையின் அழுத்தத்தை குறைத்தது.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்ப்பில் ஹசில்வுட் மற்றும் ஸ்டேனிஸ் தலா 2 விக்கெட்டைகளை வீழ்த்தியிருந்தனர்.
ஆட்டநாயகன் தசுன் சானக. போட்டியின் தொடர் நாயகன் அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ஞ்.
மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.