உக்ரைன் – ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த தனது 19 வயது மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்து ஊக்கம் கொடுத்துள்ளார் WWE நட்சத்திரம் ஜோன் சீனா. இந்த உருக்கமான சந்திப்பு குறித்து பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது WWE.
WWE நட்சத்திர வீரரும், நடிகருமான ஜோன் சீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது ஆட்ட முறை மற்றும் அவரது துடிப்பான செயல்பாட்டை பார்க்கவே அமர்க்களமாக இருக்கும். சீனா ரிங்கிற்குள் என்ட்ரி கொடுக்கும்போது வரும் தீம் மியூசிக்கை அவரது ரசிகர்கள் பலரும் ரிங்க்டோன்களாக வைத்திருப்பது வழக்கம். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றவர் ஜோன் சீனா. கடந்த 1999 முதல் தொழில்முறையாக விளையாடி வருகிறார். ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த வருகிறார்.
அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர்தான் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் மீஷா. 19 வயதான அவர் மாற்றுத்திறனாளி. டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் அவரால் பேச முடியாது. மரியுபோல் நகரில் தாயுடன் வசித்து வந்துள்ளார். ரஷ்ய படையினர் அந்த நகரை முற்றுகையிட்ட போது வீட்டை இழந்துள்ளார் மீஷா.
தனது மகனை எப்படியேனும் நாட்டை விட்டு பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற முயற்சியில் இறங்கியுள்ளார் மீஷாவின் தாயார் லியானா. போர்க்களமாக நாடே மாறிய நிலையில் மாற்றுத்திறனாளி மகனை அழைத்து செல்லும் சவாலான பணியை செய்துள்ளார். வெடிகுண்டு சத்தம் கேட்டால் அதிர்ச்சியில் உறைந்து, பயத்தில் சத்தம் போடுவாராம் மீஷா. அப்போது மகனை சமாதானம் செய்ய ”நாட்டை விட்டு பத்திரமாக வெளியே சென்று விட்டால் உனது ஹீரோ ஜோன் சீனாவை சந்திக்கலாம்” என சொல்லியுள்ளார். அது வெறும் ஃபேண்டஸி கதை என்பது லியானாவுக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் அந்தக் கதையை தன் மகன் நம்பும்படி சொல்லியுள்ளார்.
பல்வேறு தடைகளை கடந்து நெதர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றுக்கு வந்து சேர்ந்துள்ளனர் மீஷாவும், லியானாவும். புது இடத்திற்கு வந்த நொடியில் இருந்து சீனா குறித்து கேட்டு வந்துள்ளார் மீஷா. அவரது தாயாரும் தினம் ஒரு கதையை சொல்லி வந்துள்ளார். இந்த செய்தி பிரபல அமெரிக்க செய்தி நிறுவனத்தில் வெளியானது. அதை ஜோன் சீனா படித்துள்ளார். அடுத்த 60 நிமிடங்களில் தனது ரசிகரை சந்தித்து விட முடிவு செய்துள்ளார் அவர்.
அதன்படி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரில் மீஷா தங்கியுள்ள அகதிகள் முகாமிற்கு நேரடியாக சென்றுள்ளார் சீனா. அவருடன் சில மணி நேரம் செலவிட்டுள்ளார். மேலும் தனது சாம்பியன்ஷிப் பெல்ட் மற்றும் தொப்பி ஒன்றை மீஷாவுக்கு அவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
.@JohnCena meets Misha, a teen who fled Ukraine after his home was destroyed.
To motivate Misha on their journey to safety, his mother told him they were on their way to find Cena. pic.twitter.com/0Aeab4GkPZ
— WWE (@WWE) June 7, 2022
”விடாமுயற்சியின் நம்பிக்கையாக இருக்கிறார் மீஷா. அவரது அம்மாவும் தான். வாழ்வின் கடினமான சூழலை விடாமுயற்சியுடன் இவர்கள் வென்றுள்ளார்கள். இது மிகவும் சாகசமும், சவாலும் நிறைந்த பயணம். எனக்கு புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். புதிய தெம்பும் கிடைத்துள்ளது” என சீனா தெரிவித்துள்ளார்.