எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போன்று 35% தள்ளுபடியுடன் இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா முன்மொழியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாகவும், அப்படி ஒரு முன்மொழிவை அவர் ஒருபோதும் செய்யவில்லை எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
35% சலுகை விலையில் எரிபொருளை வழங்குவதற்கு முன்வந்த போதிலும், ரஷ்யாவிடம் இருந்து ஏன் எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரஷ்ய அரசாங்கம் எரிபொருள் வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என ரஷ்ய தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாகவும், எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நான்கு ரஷ்ய நிறுவனங்களின் பட்டியலை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுத்தர மத்தியஸ்தம் செய்யுமாறு வாசுதேவ நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான சந்திப்பின் போது, அமெரிக்காவுடனான உறவை கெடுக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவிததார்.
எந்தவொரு நாட்டிலிருந்தும் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமக்கு அறிவிக்கவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், ரணதம்பே மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களின் கதவுகள் நாசகார நடவடிக்கையாக திறக்கப்பட்டுள்ளதாக காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறான பயங்கரவாதச் செயல்களால் மின் உற்பத்தி நிலையங்களில் தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உருவாகும், இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.