இலங்கைக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி பிரமாண்ட வெற்றியை பெற்றது. ஒரு பாடசாலை அணியை கையாளும் பாணியில் ஆடிய அவுஸ்திரேலியா, 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இரவு இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38, பதும் நிசங்க 36, தனுஷ்க குணதிலக 26, வனிந்து ஹசரங்க 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இவர்கள் 4 பேருமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றவர்கள்.
இலங்கை அணி 12வது ஓவர் முடிவில் 100 ஓட்டங்களை பெற்றிருந்த போது, 2வது விக்கெட்டை இழந்தது. இறுதியில் 128 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. வெறும் 28 ஓட்டங்களில் 9 விக்கெட்டுக்களை இழந்தது.
இலங்கைக்கு 5வது அதிகூடிய ஓட்டமாக உதிரிகளாக கிடைத்த 7 ஓட்டங்கள் அமைந்தன.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 13.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்டநாயகன் ஜோஷ் ஹேசில்வுட்.
இரண்டாவது ரி20 போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.




